மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா பயணி பலி
கொடைக்கானல் ஏரிச்சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா பயணி ஒருவர் பலியானார்.
கொடைக்கானல்:
புதுச்சேரி மாநிலம் அரவிந்த் நகரை அடுத்த அஜித் நகரை சேர்ந்தவர் கர்ணாக் குமார் (வயது 45). இவர் பிரிண்டிங் தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சபிதா. இவர்களுக்கு ரீத் (19), ஜெனிகா (17) என்ற மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்ணாக் குமார் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார்.
அவர்கள் கொடைக்கானல்-மதுரை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். நேற்று மாலையில் கர்ணாக் குமார் தனது குடும்பத்தினருடன் ஏரிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்சர்வேட்டரி கீழ்புதுக்காட்டை சேர்ந்த கலைராஜ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கர்ணாக்குமார் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அனைவருடைய நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. படுகாயமடைந்த கலைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.