பெண் காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் பெண் காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 386 பேரில் 237 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

Update: 2021-07-30 20:10 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் பெண் காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 386 பேரில் 237 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
உடற்தகுதி தேர்வு
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்காக இந்த எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
386 பேர் பங்கேற்பு
நேற்று பெண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 500 பேர் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 114 பேர் பங்கேற்கவில்லை. 386 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அழைப்பு கடிதம், அடையாள அட்டை, கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு உயரம் அளக்கப்பட்டது. 
மேலும் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்ற 237 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
உடற்தகுதி தேர்வு தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆயுதப்படை மைதானத்தில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உடற்தகுதி தேர்வு கண்காணிக்கப்பட்டது. மேலும் 15 வீடியோ கேமராக்கள் மூலமாகவும் போலீசார், உடற்தகுதி தேர்வை பதிவு செய்தனர். மேலும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் வந்து காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்