வெவ்வேறு சம்பவங்களில் ஆசிரியர் உள்பட 3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஆசிரியர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-07-30 19:41 GMT
ஏர்வாடி:
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஆசிரியர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆசிரியர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கண்டிகைப்பேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் நெல்சன் (வயது 40). இவர் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா, அம்பை அருகே கோவில்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

நெல்சனின் பெற்றோர் அவரது வீடு அருகே தனியாக மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்பையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நெல்சன் தனது மனைவி, மகனுடன் சென்றார். பின்னர் மனைவி அனிதாவையும், மகனையும், அனிதாவின் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கண்டிகைப்பேரிக்கு வந்தார். நெல்வன் தனது தாயார் வீட்டில் சாப்பிடாமல் தனியாக சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று இரவில் அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அனிதா ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி வாலிபர்

திசையன்விளை அருகே மலையன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் யாதவராஜ். இவருடைய மகன் வாமன்ராஜ் (21). பி.காம். பட்டதாரியான இவர் சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாமன்ராஜ் பிறந்த நாள் கொண்டாடியபோது, அந்த பெண் சமூக வலைதள இணைப்பை பிளாக் செய்து துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வாமன்ராஜ் அங்குள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று வாமன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

லோடு ஆட்டோ டிரைவர்

ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடி தெற்கு சத்திரிய நாடார் தெருவை சேர்ந்தவர் நாராயணசெல்வன் (52). லோடு ஆட்டோ டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நாராயண செல்வன்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்