குளித்தலையில் தி.மு.க. நிர்வாகி தற்கொலை முயற்சி

குளித்தலையில் தி.மு.க. நிர்வாகி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2021-07-30 19:31 GMT
கரூர்
குளித்தலை
 குளித்தலை தெற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சீனிவாசன் என்பவருக்கு குளித்தலை உழவர் சந்தை-மணப்பாறை ரெயில்வே கேட் பகுதியில் சொந்தமாக நிலம் இருந்தது. இந்தநிலையில், அவருக்கு தெரிவிக்காமல் அந்த நிலத்தில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையின் போது சீனிவாசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தததால், தனக்கு சொந்தமான இடத்தில் வேலி போட்டு அடைத்து விட்டார். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்முறையீடு செய்யப்பட்டதால் அந்த வழக்கு மீண்டும் நடைபெற்று வந்தது. சீனிவாசன் இறந்து விட்டதால் அவரது குடும்பத்தார் வழக்கை நடத்தி வந்தனர்.
 இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்ட சாலை பகுதியை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. ஆனால், அந்த இடத்தின் உரிமையாளருக்கு உரிய மதிப்பீட்டு தொகை வழங்கப்படாத காரணத்தால் தற்காலிகமாக திறந்து கொள்ள பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஐகோர்ட்டு மதுரை கிளை பின்னர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சீனிவாசனின் மகன்களில் ஒருவரும், குளித்தலை நகர தி.மு.க. 7-வது வார்டு பிரதிநிதியுமான மாணிக்க மணிவாசகம், தங்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய மதிப்பீடு தொகை வழங்கக்கோரி, நேற்று விஷத்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு வீடியோ மூலம் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்