புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு

புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2021-07-30 18:36 GMT
புதுச்சேரி, ஜூலை
புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
பாராட்டு
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
புதுவையில் பா.ஜ.க. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் உரிய இடஒதுக்கீடு வழங்கவேண்டும்   என்ற   கோரிக்கை உள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க. அலுவலகத்தில் உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
புதுவை பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டும் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோல் தற்போதுள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அந்த இடஒதுக்கீட்டை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
50 சதவீத இடஒதுக்கீடு
அவரிடம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடங்கள் பெறும் அரசின் முடிவு என்னவானது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை செய்து முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.
___

மேலும் செய்திகள்