வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை

மோட்டார் சைக்கிளை வழிமறித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர், போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2021-07-30 18:24 GMT
காரைக்குடி,

மோட்டார் சைக்கிளை வழிமறித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர், போலீசில் சரண் அடைந்தனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர், மகாலிங்கம் (வயது 42). இவர் தேவகோட்டை ரஸ்தா அருகில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
இவர் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 3 பேர் ஒரு வேனில் பின்தொடர்ந்தனர். அங்குள்ள ஒரு கல்லறைத்தோட்டம் அருகே சென்றபோது மகாலிங்கத்தை வழிமறித்த அவர்கள் வேனிலிருந்து இறங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் பட்டா கத்தியால் மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடித்துடித்து இறந்தார். பின்னர் அவர்கள் அதே வேனில் தப்பிச் சென்றனர்.

2 பேர் போலீசில் சரண்

இது பற்றி தகவல் அறிந்ததும் காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கல்லல் செல்லும் வழியில் கீரணிப்பட்டி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த வேனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
இந்த நிலையில் தேவகோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) சுந்தரபாண்டியன் (21) ஆகிய 2 பேர் இந்த கொலை வழக்கில் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரான மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெண் தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலையான மகாலிங்கத்துக்கு மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்