சித்தப்பாவை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை-சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு

சித்தப்பாவை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-07-30 17:46 GMT
சிவகங்கை,

காரைக்குடி காந்திபுரத்தில் உள்ள மேட்டுதெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).இவரது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக இடம் காரைக்குடி கழனிவாசலில் இருந்தது. இந்த இடத்தை விற்பனை செய்து ஆறுமுகத்தின் உறவினர்கள் பணத்தை பங்கு பிரித்துக் கொண்டனர்.அதில் ஆறுமுகத்தின் அண்ணன் பெருமாள் என்பவரின் 3-வது மகன் சரவணன் (35) என்பவருக்கு ரூ.1½ லட்சம் தர வேண்டி இருந்தது.இந்தப்பணத்தை தரும்படி சரவணன் தன்னுடைய அண்ணன் நாகப்பனின் மனைவி முத்துக்கண்ணுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதுபற்றி அறிந்த ஆறுமுகம் சரவணனிடம் பேசி சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் சென்ற ஆறுமுகத்தை கம்பால் தாக்கினார். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் இறந்தார். இதுதொடர்பாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். கைதான சரவணன் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதிசாய்பிரியா குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


மேலும் செய்திகள்