தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து; டிரைவர்கள் படுகாயம்

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிய விபத்தில் சுண்ணாம்புக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2021-07-30 17:37 GMT
நல்லம்பள்ளி:

லாரிகள் மோதியது
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி வழியாக நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை சீர்காழி பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜதுரை (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சுண்ணாம்புக்கல்  ஏற்றி சென்ற லாரி மீது மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த, சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் செல்லபாண்டியன் (24), மாற்று டிரைவர் மீனாட்சிசுந்தரம் (52) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனால் தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 2 டிரைவர்களையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் லாரியை போலீசார் மற்றும் சுங்கச்சாவடியினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். 
இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்