தம்பதிக்கு ஆயுள் தண்டனை

ரூ.400 கடன் பாக்கி தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-07-30 17:20 GMT
புதுக்கோட்டை, ஜூலை.31-
ரூ.400 கடன் பாக்கி தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கொத்தனார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான். கட்டிட மேஸ்திரியான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த உறவுக்காரரான துரை (வயது 42) ரூ.1,000 கடன் வாங்கியிருந்தார்.
கொத்தனாரான துரை, தான் வாங்கிய கடனில் ரூ.600-க்கு நாகூரானிடம் வேலை பார்த்து ஈடுகட்டினார். மீதம் ரூ.400 கடன் திருப்பி செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில் கடன் பாக்கி தொகையை திருப்பி கேட்டு நாகூரானின் மனைவி, துரையின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். வீட்டில் துரையின் மனைவி செல்வராணி மட்டும் இருந்த நிலையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.
வாக்குவாதம்
இந்த நிலையில் கடன் பாக்கி தொகை தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி இரவு துரைக்கும், நாகூரானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே நாகூரானின் மகன் மாரிமுத்து (22) அங்கு வந்தார். அப்போது துரையின் மனைவி செல்வராணி மாரிமுத்துவின் கைகளை பிடித்து கொள்ள துரை வீட்டில் உள்ள கத்தியை எடுத்து வந்து மாரிமுத்துவின் நெஞ்சில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சிசிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் துரை மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் துரை மற்றும் அவரது மனைவி செல்வராணிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.400 அபராதமும், அபராத தொகைகட்டத்தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்