மேகமலையில் 3 தலைமுறைகளாக வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்; விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை
மேகமலையில் 3 தலைமுறைகளாக வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டுவில் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் மணவாளன், மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் மற்றும் தும்மக்குண்டு, மேகமலை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மலைக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், 3 தலைமுறைகளுக்கு மேல் மேகமலை வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மலைக்கிராம பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை வனத்துறையினர் தடுக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.