கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணி
நாகை கடலோர பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை கடலோர பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
ரூ.9 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு
மீன்கள் மற்றும் கடலிலுள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் பவளப்பாறைகள் விளங்கி வருகிறது. இந்த நிலையில் மீன்வளத்தை பெருக்குவதற்காக கஜா புயல் புனரமைப்பு மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் மீன் வளத்துறை சார்பில் தொடங்கப்பட்டன.
நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் செயற்கை பவளப்பாறை அமைப்பதற்காக ரூ.9 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு பூம்புகாரில் பவளப்பாறை வடிவமைப்பு செய்யப்பட்டது
இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் செயற்கை பவளப்பறைகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
பவளப்பாறைகள் அமைக்கும் பணி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்ராஜ், தி.மு.க நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சென்றனர்.
பூம்புகாரில் தயார் செய்யப்பட்டு கோட்டியா படகு மூலம் கொண்டு வரப்பட்ட பவளப்பாறைகள் நடுக்கடலில் ரோப் கருவி கொண்டு இறக்கி விட்டனர். செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது:-
7-ந்தேதி வரை நடைபெறும்
மீன்வளம் பெருகி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக செயற்கை பவளப்பாறைகள் நாகை மாவட்டத்தில் நடுக்கடலில் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாகை, கல்லார், வெள்ளப்பள்ளம், வானவன்மாகதேவி, வேட்டைகாரனிருப்பு, விழுந்தமாவடி, திருப்பூண்டி, செருதூர், வேளாங்கண்ணி, பொய்யூர் ஆகிய 9 இடங்களில் ரூ.3 கோடி மதிப்பில் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்த பணிகள் வருகிற 7-ந்தேதி(சனிக்கிழமை) வரை நடைபெறும் என்றார்.