நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனை மூலம் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனை மூலம் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஆணைகள் வழங்கும் விழா திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மேலும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமின் தொடக்க விழாவும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் விசாகன் முன்னிலை வகித்தார்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி நலவாரியத்தில் பதிவு பெற்ற 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பொதுமக்களின் குறைகளை 100 நாட்களுக்குள் தீர்க்கும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தையும் செயல்படுத்தி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
891 மனுக்களுக்கு தீர்வு
இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,845 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 891 மனுக்கள் ஏற்கப்பட்டு அதற்கான தீர்வும் அளிக்கப்பட்டுள்ளது. 266 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 688 மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அந்த மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டு கேட்டு 19 ஆயிரத்து 819 பேர் விண்ணப்பித்தனர். இதில் 17 ஆயிரத்து 746 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களில் 10 ஆயிரத்து 958 பேருக்கு ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 73 பேரின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தடுப்பூசி முகாம்
அதையடுத்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற 5 ஆயிரத்து 785 கட்டுமான தொழிலாளர்களுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், வடமதுரை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், கொடைக்கானல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானம் மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல், கேட்புமனு சமர்ப்பித்தல் போன்றவற்றுக்கு www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டணமின்றி பதிவு செய்யலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 821 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் தடைபட்டு இருந்தன. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இசை கருவிகள்
விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்பட 17 நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர். அத்துடன் 1,700 தொழிலாளர்களுக்கு ரூ.26 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் விருப்ப நிதி மூலம் வாங்கப்பட்ட இசை கருவிகளை பார்வையற்ற இசைக்குழுவினருக்கும் வழங்கினர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன், தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.