ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திண்டுக்கல்:
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலையில் அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழை பிரசாதமாக பெற்றுச் சென்றனர். இதேபோல் திண்டுக்கல் காளகத்தீசுவரர் கோவிலில் அபிராமி அம்மன், ஞானாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் கவடக்கார தெரு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரமும், வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு எலுமிச்சை பழம் அலங்காரமும், தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரமும், போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவிலில் காமாட்சி அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம்
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் நத்தம் கைலாசநாதர், பகவதி அம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் ஜோதிஅம்பிகை கோவில், காந்திபுரம் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் சின்னமுத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோவில், சித்தரேவு முத்தாலம்மன் கோவில் ஆகியவற்றில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் கோவில் வளாகத்தில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினார்கள். பழனி ரணகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல மாவட்டம் முழுவதும் நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.