காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தளி,
காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காண்டூர் கால்வாய்
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசன நிலங்கள்4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அது தவிர பெரிய குளம், செட்டிக்குளம், செங்குளம், கரிசல்குளம் உள்ளிட்ட குளங்கள் மூலமாக 3 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.
அத்துடன் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் குடிநீர் திட்டங்கள் மூலம் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் வினியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது 4-ம் மண்டல பாசனத்திற்காக அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அணையின் மேற்புறத்தில் உள்ள கைப்பிடி சுவர்களில் பராமரிப்பு செய்து வர்ணம் பூசுதல், அணையின் கேட்டுகள், கண்காணிப்பு கோபுரம் மற்றும் ஷட்டர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் அணைப்பகுதி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இன்று தண்ணீர் திறப்பு
இந்த சூழலில் திருமூர்த்திஅணை பகுதியில் போதியளவு மழை இல்லாததால் நீர்வரத்து ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 28-ந்தேதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையில் நல்லாறுக்கு அருகில் இடது பக்க சுவர் சேதம் அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதுடன் அங்கு கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பணிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது. இதனால் இன்று(சனிக்கிழமை) முதல் மீண்டும் கால்வாயில் தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.