குமரலிங்கம் பகுதியில் சாலையில் வீணாக வழிந்தோடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குமரலிங்கம் பகுதியில் சாலையில் வீணாக வழிந்தோடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போடிப்பட்டி:
குமரலிங்கம் பகுதியில் சாலையில் வீணாக வழிந்தோடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீர்ப்பாசனம்
விவசாயத்தின் வேர் என்பது நீர் தான். ஏனென்றால் பாசனத்துக்குப் போதுமான அளவில் தண்ணீர் கிடைத்தால் தான் சிறந்த மகசூல் சாத்தியமாகும்.பொதுவாக மழைநீரை அடிப்படையாகக் கொண்டு மானாவாரி, கிணறு மற்றும் ஆள்துளைக் கிணற்று நீரைப்பயன்படுத்தி இறவைப் பாசனம், குளத்துநீரைப் பயன்படுத்தி குளத்துப் பாசனம், அணையிலிருந்து வாய்க்கால்கள் மூலம் பெறப்படும் நீரைப் பயன்படுத்தி வாய்க்கால் பாசனம் என பல முறைகளில் நீர்ப்பாசனம் நடைபெற்று வருகிறது.
இதில் நமது பகுதியில் மழைப் பொழிவு குறைந்தாலும் எங்கோ பெய்யும் மழை நீரைப் பயன்படுத்தி பாசனம் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கால்வாய்ப் பாசனம் விவசாயிகளுக்கு பெருமளவு கைகொடுக்கிறது. அந்த வகையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள விளைநிலங்கள் அமராவதி, திருமூர்த்தி அணைகள் மூலம் பாசனம் பெறுகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகள், கேரள மாநிலப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதில் அமராவதி அணையின் நீர் இருப்பு முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளது.இதனால் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரிநீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
அலட்சியம்
இந்தநிலையில் ஒருசில இடங்களில் பாசன நீர் வீணாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பலநேரங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆனாலும் பல இடங்களில் பாசன நீர் வீணடிக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது.ஒருசில இடங்களில் பொதுமக்களின் அலட்சியத்தால் பாசனக் கால்வாய்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.ஒருசில பகுதிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனக் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.மேலும் ஒருசில பகுதிகளில் விவசாயிகளின் அலட்சியத்தால் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
தங்கள் நிலத்தில் வெள்ளாமை எதுவும் செய்யாத நிலையில் உபரியாகக் கிடைக்கும் பாசன நீரை அலட்சியமாக விளைநிலத்தில் திருப்பி விடுகின்றனர்.போதிய வரப்பு உள்ளிட்டவை இல்லாததால் பாசன நீர் நிலத்திலிருந்து வெளியேறி வீணாகிறது.அந்தவகையில் குமரலிங்கத்தையடுத்து பழனி சாலையில் பெருமளவு பாசன நீர் வெளியேறி மழைநீர் வடிகால்களில் நிறைந்து, சாலையில் பாய்ந்து வீணாகிறது.எனவே ஒவ்வொரு சொட்டு நீரும் முக்கியமானது என்பதை அதிகாரிகளும் விவசாயிகளும் உணர வேண்டும்.இங்கே வீணாகும் நீருக்காக எங்கேயோ ஒரு விவசாயி தண்ணீரில்லாமல் காயும் பயிரைக் கண்ணீருடன் பார்த்தவாறு எதிர்பார்ப்புடன் காத்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.