காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி தண்டவாளத்தில் தலை வைத்து சுங்கச்சாவடி ஊழியர் தற்கொலை கொடைரோடு அருகே பரிதாபம்

கொடைரோடு அருகே காதல் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து சுங்கச்சாவடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-07-30 14:57 GMT

கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது மதினாபானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கமலக்கண்ணன் தனது மனைவியுடன் தர்மாபுரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஹரிஸ் (10) என்ற மகனும், கிரிநதி (9) என்ற மகளும் உள்ளனர்.
கமலக்கண்ணன் கொடைரோடு சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் மதினாபானு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து கணவன், மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மதினாபானு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். குழந்தைகள் கமலக்கண்ணனின் பெற்றோர் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். 
உடல் துண்டானது
இதனிடையே மனைவி பிரிந்து சென்றதால் கமலக்கண்ணன் விரக்தி அடைந்தார். மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கமலக்கண்ணன் திடீரென்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் தர்மாபுரி ரெயில்வே கேட்டை அடுத்த தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டார். அப்போது கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ரெயில் கமலக்கண்ணன் தலை மீது ஏறி நசுக்கியதில் அவர் உடல் துண்டாகி அங்கேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைரோடு ெரயில்வே போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்