மயானத்தில் குப்பைகளை எரித்ததால் புகைமூட்டம்
மயானத்தில் குப்பைகளை எரித்ததால் புகைமூட்டம்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் குமார்நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மயானம் உள்ளது. நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் மயானத்தின் உள்பகுதியில் கழிவுகள் நிரம்பியும், புதர் மண்டியும் கிடந்தது. நேற்று மதியம் மயானத்தை மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த வெட்டப்பட்ட முட்புதர்கள் மற்றும் கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த நிலையில் கழிவுகளுடன் அங்கு கிடந்த டையர்களும் சேர்ந்து எரிந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அங்கு அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் தீ எரிந்த இடத்தின் அருகே ஏராளமான வாகனங்கள் நிறுத்தி இருந்ததுடன், மின்மாற்றி மற்றும் மின்கம்பம் இருந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாய சூழல் நிலவியது. இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.