பேரளம் அருகே தீக்குளித்து சிறுமி சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது
பேரளம் அருகே தீக்குளித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று ஒரு வாலிபருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியையும், வாலிபரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பேரளம் அருகே உள்ள போழக்குடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது25), ஜான் (24), புலிகுட்டி (23), முருகன் (44) ஆகிய 4 பேர் சிறுமியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.