வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு வியாபாரியை வெட்டிய 3 பேர் கைது

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு வியாபாரியை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-30 13:00 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலு (வயது 40). இவர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை தனது காய்கறி கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மார்க்கெட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவரிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்ததால் ரவுடி கும்பல் நாங்கள் பிரபல ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளிகள் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் மயக்க ஸ்பிரேயை அவரின் முகத்தில் அடித்து விட்டு கத்தியால் பாலுவின் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த பாலு மார்க்கெட்டில் இருந்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு ஓடிச் சென்று தப்பினார். அவருக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். 

விசாரணையில் வியாபாரி பாலுவை வெட்டியது வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த அறுப்பு ராமச்சந்திரன் (வயது 35), ரவி (40), வேலப்பாடியை சேர்ந்த தாமு (30)  என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள உதயா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மார்க்கெட்டில் மாமூல் கேட்கும் ரவுடிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்