மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளுக்காக அடையாறு சந்திப்பின் தோற்றம் மாறுகிறது

மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளுக்காக அடையாறு சந்திப்பின் தோற்றம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற இருக்கிறது. அடையாறு பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2021-07-30 04:17 GMT
சென்னை,

சென்னையில் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக அடையாறு சந்திப்பில் உள்ள பாலத்தின் கீழ் இரட்டை சுரங்க ரெயில் பாதை மற்றும் சுரங்க ரெயில் நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டால் சாலையில் தடுப்புகள், முக்கிய சந்திப்புகளில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் உள்ளிட்டவை நடந்தால் அடையாறு சந்திப்பின் தோற்றம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற வாய்ப்பு உள்ளது.

தற்போது அடையாறு சந்திப்பு மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 2 பாலங்களின் அடிப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டு பிற்பகுதியில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தபணி 2026-ம் ஆண்டு நிறைவடைய வாய்ப்பு உள்ளது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழிப்பாதையில் அடையாறு சந்திப்பு, பசுமை வழிசாலை மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அடையாறு பணிமனை நிலையத்தை இணைக்கும் வகையில் பணிகள் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

பாலத்தின் ஒரு பகுதி இடிக்க திட்டம்

அடையாறு சந்திப்பில் உள்ள லாட்டிஸ் பாலம் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள பாலம் அடையாறு, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் ஆகியவற்றுடன் இணைக்கும் மேம்பாலத்தின் கீழ், அடையாறு சுரங்க ரெயில் பாதை மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்கான விவாதங்கள் நடந்து வருகிறது. இரட்டை சுரங்கப்பாதைகள் இந்தபகுதியில் செங்குத்தாக மேம்பாலத்தை கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலத்தின் உச்சியில் இருந்து அடையாறு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு பாதையில் உள்ள ஒரு சில தூண்கள் இடிக்கப்படலாம்.

அதேபோல் அருகில் உள்ள பூங்காவும் கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. சுரங்க ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலைய பணிகள் முடிந்த உடன் இடிக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி மீண்டும் கட்டித்தரப்படும். பூங்காவும் சீரமைக்கப்படும். இதனால் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளுக்காக அடையாறு சந்திப்பின் தோற்றம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற இருக்கிறது.

ராயப்பேட்டை அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மெட்ரோ ரெயிலின் பாதை குறுக்குவெட்டாக அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து விவரங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேம்பாலங்கள் உள்ள பகுதிகளில் மெட்ரோ ரெயிலுக்கான கட்டுமான பணியின்போது வாகன போக்குவரத்து தடை செய்யப்படமாட்டாது. மாறாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு சுமுகமான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால் பணிகள் நடக்கும் பகுதியில் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

போக்குவரத்து தடை இல்லை

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் உள்ள சி.பி.ராமசாமி சாலை, கோடம்பாக்கம் மற்றும் பசுல்லா சாலை ஆகிய 3 இடங்களில் உள்ள மேம்பாலங்களின் அடித்தள விவரத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளது. மாநகரில் உள்ள பிற மேம்பாலங்கள் குறித்த எந்த தகவல்களும் தற்போது கேட்கப்படவில்லை.

மேம்பாலங்களின் கீழ் சுரங்க ரெயில் பாதைகள் மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட இருந்தால், சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளால் ஏற்படும் சவால்கள் மற்றும் வாகன போக்குவரத்தை மாற்றுவது குறித்து ஒரு உயர்மட்டக்கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. மேம்பாலம் கட்டுமானத்தின் போது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யமாட்டோம். மாற்று ஏற்பாடுகள் மூலம் போக்குவரத்து தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்