தமிழக கோவில்களில் திருடி ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 2 சிலைகளை மீட்டு கொண்டுவர நடவடிக்கை

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட 2 சிலைகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-30 01:19 GMT
சென்னை,

தமிழகம் மற்றும் இந்திய கோவில்களில் உள்ள விலை மதிப்புமிக்க சிலைகளை திருடி கடத்திச்சென்று, பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடத்திச்சென்று விற்பனை செய்த சில சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில சிலைகள் மத்திய அரசு மூலமாக தமிழகத்திற்கு ஏற்கனவே மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ள தமிழகம் மற்றும் இந்திய கோவில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 8 சிலைகள் உள்பட 14 கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சிலைகள்

அவற்றில் தமிழகத்தைச்சேர்ந்த 2 சிலைகள் உள்ளன. இவை சீர்காழி

பகுதியில் உள்ள கோவில்களில் திருடப்பட்டவை ஆகும். திருஞானசம்பந்தர் நடனமாடுவது போன்ற கோலத்தில் உள்ள ஒரு சிலை, நின்று கொண்டிருப்பது போன்ற கோலத்தில் உள்ள இன்னொரு சிலையும் இதில் உள்ளது. இந்த 2 சிலைகளும் 1960-ம் ஆண்டு திருடிச்செல்லப்பட்டவை.

இவை தவிர மீதி உள்ள 12 கலைப்பொருட்களும் ராஜஸ்தான், தெலுங்கானா, உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களைச்சேர்ந்தவை. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தைச் சேர்ந்த 2 சிலைகள் உள்பட 14 கலைப்பொருட்களும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

மேலும் செய்திகள்