ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரம்: முன்னாள் அமைச்சர் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த வழக்கை வேறு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.;

Update: 2021-07-30 01:14 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகம் கட்டுவதற்கு விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுகிறது. இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை.

தடை வேண்டும்

இந்த பல்கலைக்கழகம் செயல்பட அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. எனவே, போதிய நிதியை ஒதுக்கவும், பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரை நியமிக்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விட்ட நிலையில், எல்லை வரம்பை மீறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல் ஆகும். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் விலகல்

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை வேறு டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்