தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்; ஆட்டை அடித்துக்கொன்றது
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்துக்கொன்றது.
தாளவாடி,
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்துக்கொன்றது. மற்றொரு ஆட்டை காட்டுக்குள் இழுத்துச்சென்றது.
ஆடு, மாடுகள்
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தை வசித்து வருகின்றன. இவை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. அண்மையில் மல்குத்திபுரம், பீம்ராஜ்நகர், தொட்டகாஜனூர், சூசைபுரம் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
தாளவாடி அருகே உள்ள ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). விவசாயி. இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை அவர் வீட்டின் அருகே உள்ள பட்டியில் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார்.
2 ஆடுகள் சாவு
இந்த நிலையில் மறுநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது பட்டியில் இருந்த ஒரு ஆட்டை காணவில்லை. மற்றொரு ஆடு கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அந்த ஆட்டின் அருகே சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது. ஒரு ஆட்டை சிறுத்தை கொன்றுவிட்டு, மற்றொரு ஆட்டை தூக்கி சென்றது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று, ஆடு அருகே பதிவாகியிருந்த விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் பதிவானது சிறுத்தையின் கால்தடம் என்பது உறுதியானது. காணாமல் போன ஆட்டை தின்பதற்காக சிறுத்தை காட்டுக்குள் இழுத்து ெசன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிறுத்தை சென்ற கால்தடத்தை பார்த்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆட்டை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.