திருநங்கைகள் தொழில் முனைவோராக மாற வேண்டும்
திருநங்கைகள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று சார்பு நீதிபதி லதா வேண்டுகோள் விடுத்தார்.
பெரம்பலூர்
சட்ட உதவி முகாம்
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுபாதேவி வழிகாட்டுதலின் பேரில், திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் எளம்பலூரில் நேற்று நடந்தது.
முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா தலைமை தாங்கி, பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட நிவாரண உதவி தொகை மற்றும் அடையாள அட்டைகளை திருநங்கைகளுக்கு வழங்கினார்.
தொழில் முனைவோர்
அப்போது அவர் பேசியதாவது:-
திருநங்கைகள் தன்னம்பிக்கையோடும், நல்ல சிந்தனையோடும் கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும். திருநங்கைகள் வேலைவாய்ப்பினை தேடும் நிலையில் இருந்து மாறி, தொழில் முனைவோராக மாற தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருநங்கைகள் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய வழிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் அவர்கள் தொழில் முனைவோராக மாற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் சட்டம் வழங்கியுள்ள திருநங்கைகளுக்கான உரிமைகள் மற்றும் அவசியத்தினை எடுத்துரைத்து, கலந்துரையாடல் மூலம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கலந்துரையாடல்
முகாமில், பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளீஸ்வரன், தனியார் அறக்கட்டளையின் இயக்குனர் சிற்றம்பலம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.