மரங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கிய வனத்துறையினர்

பெரம்பலூர் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

Update: 2021-07-29 19:34 GMT
அரியலூர்
பெரம்பலூர்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு சொந்தமான கீழக்கணவாயில் உள்ள நிலத்தில் வளர்ந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இதுதொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இதேபோல, ஏற்கனவே கண்ணனின் நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதாகவும், இதுகுறித்து அவர் புகார் தெரிவித்தும் பெரம்பலூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கண்ணனின் நிலத்தின் அருகே உள்ள மேலும் 2 பேரின் நிலத்தில் உள்ள தலா 2 சந்தன மரங்கள், பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான காப்பு பகுதிகளில் உள்ள சந்தன மரங்களும் வெட்டி கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
தனிப்படை போலீசார் விசாரணை
அந்த புகார்களின் அடிப்படையில் வனப் பகுதியிலும், தனியார் நிலத்திலும் வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்கள் குறித்து விசாரணை நடத்தவும், தற்போதுள்ள சந்தன மரங்கள் குறித்தும் கணக்கெடுக்கவும் வனச்சரக அதிகாரி குமார் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்ட வனத்துறை அதிகாரி குகனேஷ் உத்தரவிட்டார்.
 அதன்பேரில் அந்த தனிப்படையினர் வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்கள் குறித்து நேற்று கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். முதலில் அவர்கள் கீழக்கணவாயில் தனியார் நிலத்தில் வளர்ந்துள்ள சந்தன மரங்களையும், வெட்டி கடத்தப்பட்ட பகுதியையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கீழக்கணவாய் மலைப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும், அங்கு வளர்ந்துள்ள சந்தன மரங்கள் குறித்தும், அவற்றின் பருமன், வளர்ச்சி குறித்தும் கணக்கெடுத்தனர். 
பிற பகுதிகளிலும்...
 இதேபோல வேலூர், சிறுவாச்சூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள சந்தன மரங்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர். இதையடுத்து மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் வளர்ந்துள்ள சந்தன மரங்கள் குறித்தும் தனிப்படையினர் கணக்கெடுக்க உள்ளனர்.
 கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்தால் தான் வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்கள் எத்தனை?, வனப்பகுதியிலும், தனியார் நிலத்திலும் வளர்ந்துள்ள சந்தன மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது தெரியவரும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்