நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு-480 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாயாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக சரிவடைந்தது.
முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பறவை காய்ச்சல் பீதி
பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விற்பனை குறைந்துள்ளது.
எனவே நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதை தவிர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் முட்டை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-500, ஐதராபாத்-420, விஜயவாடா-435, மைசூரு-490, மும்பை-495, பெங்களூரு-490, கொல்கத்தா-490, டெல்லி-445.
நாமக்கல் மண்டலத்தில் 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 35 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.