பன்றிகளை பிடித்த வாலிபருக்கு கத்திக்குத்து, தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 18:27 GMT
சீர்காழி:
சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்த வாலிபர்   கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு-
பன்றிகளை பிடித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பங்களாகுளத்து மேட்டு தெரு, திட்டை ரோடு, கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் பன்றிகள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வியிடம் சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 
இது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று சீர்காழி நகராட்சி சார்பில் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறையில் இருந்து ஆட்களை கொண்டுவந்து சீர்காழி நகர் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தனர். 
வாகனத்தின் கண்ணாடி உடைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பன்றி வளர்ப்பவர்கள் பன்றி பிடிக்க வந்த ஆட்களையும், வாகனங்களையும் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பன்றிகளை விட்டால்தான் ஆட்கள் மற்றும் வாகனங்களை விடுவதாக கூறி தகராறில் ஈடுபட்டு வந்தனர். 
இதுதொடர்பாக நகராட்சி அலுவலர்கள் மற்றும் சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை பொருட்படுத்தாத பன்றி வளர்ப்பவர்கள் பன்றி பிடிக்க வந்த ஆட்களை தாக்கி வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். 
ஒருவருக்கு கத்திக்குத்து
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராமல் போலீஸ் நிலையம் முன்பு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் மற்றும் மர கட்டைகளால் தாக்கி கொண்டனர். அப்போது பன்றி வளர்ப்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பன்றியை பிடிக்க வந்த மயிலாடுதுறையை சேர்ந்த சங்கிலி கருப்பன் (வயது 31) என்பவரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சங்கிலி கருப்பன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
3 பேர் கைது
இதையடுத்து இரு தரப்பினரும் போலீஸ் நிலையம் முன்பு மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி கீழ மாரியம்மன் கோவில் தெருவை ேசர்ந்த மாரிமுத்து (42), இவருடைய மகன் கார்த்திக் (20), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்