ஆபத்தான குளியலில் ஈடுபடும் சிறுவர்கள்

மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில் சிறுவர்கள் ஆபத்தான குளியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-29 18:15 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில் சிறுவர்கள் ஆபத்தான குளியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு 
மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான பாசன கால்வாய்கள் பலவும் போதிய பராமரிப்பில்லாமல், குப்பைகளால் பாழாகி வருகிறது. அத்துடன் கால்வாயில் துணி துவைப்பது, கழிவுநீரைக் கலப்பது போன்ற செயல்களால் பாசன நீர் மாசுபட்டு வருகிறது. தற்போது அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் வினாடிக்கு 667 கன அடியும், பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் ஆறு மற்றும் கால்வாயில் குளிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிலும் அமராவதி பிரதான கால்வாயில் கரையோர கிராம மக்கள் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சாகச குளியல்
கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்கிறது. ஆனாலும் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் கும்பல் கும்பலாக கால்வாயில் ஆபத்தான நிலையில் குளித்து வருகிறார்கள். மடத்துக்குளத்தையடுத்த பார்த்தசாரதிபுரத்தில் பெரியவர்கள் யாரும் உடனில்லாத நிலையில் சிறுவர்கள் கால்வாயில் தாவிக் குதித்தும், ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு நீந்தியும் பல்வேறு சாகசங்களைச் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். 
சிறுவர்கள் இவ்வாறு குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அத்துமீறி வாய்க்காலில் குளிப்பவர்களை போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்