நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம்
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம் நீண்ட நாட்களாக விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
போடிப்பட்டி
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம் நீண்ட நாட்களாக விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
தென்னை விவசாயம்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேங்காய்களை பயன்படுத்தி கொப்பரை உற்பத்தி செய்வதிலும் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேங்காய்களை மதிப்பு கூட்டும் விதமாக கொப்பரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்போது விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதேநேரத்தில் சிறு விவசாயிகள் கொப்பரைகளை உலர வைப்பதற்கான உலர் களம் அமைப்பதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் கொப்பரை உற்பத்தியில் ஆர்வம் காட்டுவதில்லை.
அத்துடன் கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்களும் மழைக்காலங்களில் கொப்பரைகளை காய வைப்பதற்கு வழியில்லாமல் கொப்பரை உற்பத்தியில் தேக்கம் ஏற்படும் நிலை உள்ளது.இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சோலார் உலர்களங்கள் ஓரளவு கைகொடுப்பதாக உள்ளது.எனவே உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சோலார் உலர்களங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.இது கொப்பரை மட்டுமல்லாமல் அனைத்து வகையான தானியங்களையும் மழைக்காலங்களிலும் உலர வைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
எரிபொருளாகும் கழிவுகள்
இங்கு சூடான காற்றின் மூலம் விரைவாக கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில் நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம் நிறுவப்பட்டது.அத்துடன் கொப்பரை உற்பத்திக்கு உதவும் வகையில் தேங்காய்களை உடைத்து தண்ணீரை வீணாகாமல் சேமிக்கும் எந்திரமும் இங்கு நிறுவப்பட்டது.பொதுவாக சூரிய ஒளியின் மூலம் கொப்பரை உற்பத்தி செய்வதற்கு 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும்.
ஆனால் இந்த எந்திரத்தின் மூலம் அதிகபட்சமாக 2 நாட்களில் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும்.அத்துடன் பூஞ்சை தாக்குதல் முற்றிலும் தவிர்க்கப்படுவதால் ரசாயனங்களில்லாமல் கொப்பரை உற்பத்தி செய்வது எளிதாகிறது. மேலும் இந்த கொப்பரை உற்பத்தி எந்திரத்துக்கு எரிபொருளாக விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கிடைக்கும் மட்டைகள் போன்றவற்றையும் தேங்காய் தொட்டி உள்ளிட்ட விவசாயக் கழிவுகளையும் பயன்படுத்த முடியும்.
இந்த எந்திரம் நிறுவப்பட்டு சுமார் 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி கொப்பரை உற்பத்தி வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா என்பது தெரிய வரும்.தற்போது பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கொப்பரை உற்பத்தி எந்திரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.