பழைய பஞ்சு குடோனில் தீ விபத்து
திருப்பூரில் பழைய பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் எந்திரங்கள்எரிந்து நாசம் ஆனது.
திருப்பூர்
திருப்பூரில் பழைய பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் எந்திரங்கள்எரிந்து நாசம் ஆனது.
தீ விபத்து
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் கபீர் குட்டி இவர் திருப்பூர் கருவம்பாளையம் புளியமரதோட்டம் பகுதியில் பஞ்சு குடோன் வைத்துள்ளார். பல்லடம் பகுதியில் உள்ள நூல் மில்களில் இருந்து பஞ்சு மற்றும் பழைய வேட்டிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சாக்கி, குடோனில் வைத்து பின்னர் மெத்தைகள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார்.
நேற்று காலை 8.30 மணி அளவில் பஞ்சு குடோனில் திடீரென்று தீப்பற்றியது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஞ்சு குடோன் மற்றும் பழைய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பரவியது. பின்னர் கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
எந்திரங்கள் எரிந்து நாசம்
இருப்பினும் எந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் நேற்று அந்த அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.