பாறைக்குழி நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

திருப்பூரில் மீன்பிடிக்க சென்றபோது பாறைக்குழி நீரில் மூழ்கி அண்ணன். தம்பி பலியானார்கள்.

Update: 2021-07-29 17:41 GMT
திருப்பூர்
திருப்பூரில் மீன்பிடிக்க சென்றபோது பாறைக்குழி நீரில் மூழ்கி அண்ணன். தம்பி பலியானார்கள். 
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
அண்ணன்-தம்பி
திருவண்ணாமலையை சேர்ந்தவர் பழனி. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் கவுண்டன்நாயக்கன்பாளையம் பாரதிநகரில் குடியிருந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சத்யாவயது 13 குமரன் 11 என 2 மகன்கள் இருந்தனர். நெசவாளர் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்யா 8-ம் வகுப்பும், குமரன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர். சிறுவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். வேலை முடிந்து இரவு 7 மணிக்கு கணவன்மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் சிறுவர்கள் 2 பேரையும் காணவில்லை. சைக்கிளும் அங்கு இல்லை. மகன்கள் பற்றி அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். ஆனால் சிறுவர்கள் 2 பேரும் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.
நீரில் மூழ்கி 2 பேர் பலி
இதைத்தொடர்ந்து பழனி, திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரும் கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில் சிறுவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ராதாநகர் அறிவொளிநகர் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு அருகே சிறுவர்களின் சைக்கிள் கிடந்தது. அருகில் அவர்களின் ஆடைகளும் அங்கு இருந்தன. பாறைக்குழியில் 15 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் சிறுவர்கள் மீன்பிடிக்க சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற கோணத்தில் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பாறைக்குழியில் போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் மின்விளக்கு வசதி செய்து பாறைக்குழியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய பாறைக்குழியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அதிகாலை 3 மணி அளவில் பாறைக்குழிக்குள் இருந்து சிறுவர்கள் சத்யா, குமரன் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.
நீச்சல் தெரியாது
விசாரணையில் அண்ணன் தம்பி இருவரும் பாறைக்குழிக்குள் இறங்கி மீன்பிடித்துள்ளனர். அப்போது கால்தவறி ஒருவன் நீரில் மூழ்க, மற்றொருவன் காப்பாற்ற செல்ல முயன்று 2 பேரும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் பரிதாபமாக அவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். 
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்