தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா காய்ச்சலை தடுக்கலாம் - கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தகவல்

தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா காய்ச்சலை தடுக்கலாம் என கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-07-29 17:14 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கொடிக்கால்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் தவணை நிமோகாக்கல் நிமோனியா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், திருவாரூர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது:-

நிமோனியா நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவீதம் இறப்பு ஏற்படுத்துகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் தனது 5-வது வயதிற்குள் இறக்கின்றனர். நிமோனியா நோய்க்கு தடுப்பு மருந்தாக நிமோகாக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படுகிறது.

இத்தடுப்பு மருந்தின் மூலம் 80 சதவீதம் நிமோனியாவை கட்டுபடுத்த முடியும். திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 15,130 குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இதில் 1,260 குழந்தைகளுக்கு முதல் தவணையாக நிமோகாக்கல் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப, நகர மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கான்வாடி மையங்களில் நிமோகாக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா, உதவி கலெக்டர் பாலசந்திரன், தாசில்தார் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்