ஜோலார்பேட்டை அருகே பாலத்துக்கு அடியில் பெண் எரித்துக் கொலை

ஜோலார்பேட்டை அருகே பாலத்துக்கு அடியில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-29 13:27 GMT
ஜோலார்பேட்டை

எரிந்த நிலையில்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு, காவேரிபட்டு ஊராட்சிகளுக்கு இடையே ஏரி பகுதியில் குட்டாறு தரைப்பாலம் உள்ளது. இந்தப் பகுதி முட்புதர்களுடன் காட்சியளிப்பதால் பகல் நேரத்திலேயே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருவார்கள். 

இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வழியாக சிலர் ஆடு மாடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது தலை உள்ளிட்ட அனைத்து உடல் பாகங்களும் எரிந்து சாம்பலான நிலையில், முட்டிக்கு கீழ் வலது காலும், வலதுகை ஒன்றும் மட்டும் எரியாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
பெண் உடல்

உடனடியாக இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிக்கப்பட்டு கிடந்தது ஆணா? பெண்ணா? என்பது குறித்து சோதனை செய்தனர்.
 அப்போது வலது கால் விரலில் மெட்டி மற்றும் வளையல்கள், கருகிய நிலையில் இருந்தன. மேலும் சிவப்பு நிறத்தில் சேலை இருந்ததால் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் பெண் என்பது உறுதியானது. 

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் துப்பறியும் நாய் சிம்பா சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ெபரிய கம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடய நிபுணர் பாரி வந்து தடயங்களை சேகரித்தார். 

முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது. பின்னர் எரிந்த ெபண்ணின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

யார் அவர்?

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் காணாமல் போனது குறித்து பதிவான வழக்கு விவரங்கள் குறித்து விசாரித்தார். அதில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதும், நேற்று முன்தினம் இரவு எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 
வேறுபகுதியில் இருந்து அழைத்துவந்து கொலைசெய்து உடலை எரித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மேகலா ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்