வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளை

காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-07-29 04:09 GMT
திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் காசிமா நகர் 1-வது தெருவில் 3-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மைக்கேல் நாயகம், மீனவர். இவருடைய மனைவி அந்தோணி மேரி (வயது 60). இவர்களுக்கு ரெக்ஸ் என்ற மகனும், சுபா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மைக்கேல் நாயகம் நேற்று முன்தினம் மீன்பிடிக்க விசைப்படகில் கடலுக்குள் சென்று விட்டார். வீட்டில் அந்தோணி மேரி மட்டும் தனியாக இருந்தார்.

அதே பகுதியில் 3-வது தெருவில் வசிக்கும் அவருடைய மகள் சுபா, நேற்று மாலை தனது தாயார் அந்தோணி மேரியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் போனை எடுக்காததால் தாயை பார்க்க நேரடியாக வீட்டுக்கு சென்றார்.

கொலை-கொள்ளை

அப்போது வீட்டில் தனது தாய் அந்தோணிமேரி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், வீட்டில் தனியாக இருந்த அந்தோணி மேரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. போலீசில் சிக்காமல் இருக்க அவரது உடல் மீது மிளகாய் பொடி தூவி சென்றதும் தெரிந்தது.

சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்