பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் நிழலாக செயல்பட மாட்டார் - யத்னால் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் நிழலாக செயல்பட மாட்டார் என்று பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
நிகழலாக செயல்பட மாட்டார்
எடியூரப்பாவை நீக்கியே தீர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.. இதற்காக அவர் சபதம் எடுத்து தாடியை வளர்த்து வந்தார். எடியூரப்பா பதவி விலகியதும், தான் வளர்த்த தாடியை எடுத்துவிட்டார். புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பசனகவுடா பட்டீல் யத்னாலும் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பசவராஜ் பொம்மையை புதிய முதல்-மந்திரியாக தேர்ந்து எடுத்ததில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல மனிதர். அவர் எடியூரப்பாவின் ஆதரவாளராக இருந்தாலும், நேர்மையான முறையில் பணியாற்றக் கூடியவர். அவர் எடியூரப்பாவின் நிழலாக செயல்பட மாட்டார். அவர் மந்திரியாக இருந்தபோது அவரிடம் எனது தொகுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறேன்.
ஆட்சி நிர்வாகம்
நான் கேட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். அதனால் அவர் இந்துக்களுக்கு ஆதரவாக, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாக இருந்தது. அது நிறைவேறிவிட்டது.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.