போலீசார் பிடிக்க முயன்றபோது சங்கிலி பறிப்பு திருடன் சயனைடு தின்று தற்கொலை
பெங்களூரு அருகே போலீசார் பிடிக்க முயன்ற போது சங்கிலி பறிப்பு திருடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கூட்டாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு:
பெண்ணிடம் நகை பறிப்பு
பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பட்டரஹள்ளியை சேர்ந்தவர் ரத்தினம்மா (வயது 51). கடந்த 6-ந் தேதி வீட்டின்அருகே நடந்து சென்ற ரத்தினம்மாவின் கழுத்தில் கிடந்த 55 கிராம் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றிருந்தனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மர்மநபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்காக கே.ஆர்.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார், பட்டரஹள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரத்தினம்மாவிடம் தங்க சங்கிலி பறித்தது பிரபல சங்கிலி பறிப்பு திருடர்களான ஆந்திர மாநிலம் கொத்தகோடா கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 42), அவரது கூட்டாளி சந்திசேகர் என்பதை போலீசார் உறுதி செய்தார்கள்.
கைது செய்ய முயற்சி
இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்ய ஆந்திராவுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சங்கரும், சந்திரசேகரும் பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் வருவது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திராவில் இருந்தே, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை, சீருடை அணியாத போலீசார் பின்தொடர்ந்து வந்தனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா ஒசக்கோட்டை-சிந்தாமணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கோவில் அருகே 2 பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் 2 பேரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்தார்கள். இதற்காக கோவில் அருகே போலீசார் சென்றனர்.
சயனைடு தின்று தற்கொலை
அப்போது கோவில் வெளியே நிற்பது போலீசார் தான் என்பதை உறுதி செய்த சங்கரும், சந்திரசேகரும், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில், சங்கர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஏதோ பொருளை எடுத்து விழுங்கினார். இதை பார்த்து சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள். இந்த நிலையில், சங்கா் மட்டும் திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் சயனைடு தின்று இருப்பது தெரியவந்தது. சங்கருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டார். போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்து ஏற்கனவே அவர் சயனைடுவை வைத்திருந்ததும், அதனை தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. சங்கர், சந்திரசேகர் மீது பெங்களூருவில் கே.ஆர்.புரம் உள்பட 7 போலீஸ் நிலையங்களில் தங்க சங்கிலி பறிப்பு வழக்குகள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து சூழிபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.