ஐகோர்ட்டில் நடந்த விசாரணையை சிறையில் இருந்தபடி செல்போனில் பார்த்த கைதிகள் - நீதிபதிகள் கடும் அதிர்ச்சி

பெங்களூருவில் நடந்த வன்முறை வழக்கில் கைதான 2 கைதிகள் சிறையில் இருந்தபடியே தங்களது ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் நடந்த விசாரணையை செல்போனில் பார்த்த சம்பவம் நடந்துள்ளது. இந்த முறைகேடுகளால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2021-07-28 21:05 GMT
பெங்களூரு:

ஐகோர்ட்டில் ஜாமீன் மனு

  பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் கடந்த ஆண்டு (2020) வன்முறை நடந்திருந்தது. இந்த வன்முறை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களில் முகமது ஷெரீப் மற்றும் சேக் முகமது பிலாலும் ஆவார்கள். இவர்களில் முகமது ஷெரீப் 15-வது குற்றவாளியாகவும், சேக் முகமது பிலால் 25-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இவர்கள் 2 பேரும் தற்போது பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த ஜாமீன் மனு விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் பிரதீப் சிங் ஆகிய 2 பேர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்குகள் ஆன்லைன் மூலமாக ஒளிபரப்பப்படுகிறது.

கைதிகள் செல்போனில் பார்த்தனர்

  இந்த நிலையில், நேற்று முன்தினம் முகமது ஷெரீப், சேக் முகமது பிலால் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் மூலமாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்தபடியே தங்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை முகமது ஷெரீப், சேக் முகமது பிலால் செல்போனில் பார்த்ததாக தெரிகிறது. இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  பின்னர்அவர்கள் 2 பேரும், ஜாமீன் மனு மீதான விசாரணையை செல்போனில் பார்ப்பதை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது செல்போனில் கிரீன்சார்ட் எடுத்து, அரசின் அட்வகேட் ஜெனரல் பிரசன்னகுமாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தனர். அதுபற்றி அவரை தொடர்பு கொண்டும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அட்வகேட் ஜெனரல் பிரசன்னகுமார், ஜாமீன் மனு மீதான விசாரணை கைதிகள் 2 பேரும் சிறையில் இருந்தபடியே செல்போனில் பார்த்ததற்கான ஆதாரங்களை நீதிபதிகளிடம் வழங்கினார்.

நீதிபதிகள் அதிர்ச்சி

  இதை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை கைதிகள் எப்படி செல்போனில் பார்க்கின்றனர், அவர்களுக்கு செல்போன் எப்படி கிடைத்தது, ஐகோர்ட்டு விசாரணையை ஆன்லைனில் பார்க்கும் வசதி, அதறகான பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கைதிகளுக்கு கொடுத்தது யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தும்படியும், அதுபற்றிய தகவல்களை கோர்ட்டில் தெரிவிக்கும்படியும் அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. குறிப்பாக கைதிகள் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்தது. சமீபத்தில் கூட மத்திய குற்றப்பிரிவு போலீசார், பரப்பனஅக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தி செல்போன்கள், சிம் கார்டுகளை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தனர்.

பரபரப்பு

  தற்போது சிறையில் இருந்த படியே கைதிகள், ஐகோர்ட்டில் நடைபெற்ற தங்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை செல்போனில் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரப்பனஅகரஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு, இந்த சம்பவம் மற்றொரு சாட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முகமது ஷெரீப், சேக் முகமது பிலாலிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்