திட்டமிட்டப்படி மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி
மேகதாதுவில் திட்டமிட்டப்படி புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்தார்.
பெங்களூரு:
புதிய முதல்-மந்திரி
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக உள்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். நேற்று காலையில் அவர் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று உறுதிபட தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
புதிய அணை கட்டுவோம்
மேகதாதுவில் புதிய அணை கட்ட அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதனால் திட்டமிட்டப்படி புதிய அணையை கட்டுவோம். இதில் பின்வாங்க வாய்ப்பு கிடையாது. இது கர்நாடக அரசின் உரிமை. அணை கட்ட சட்ட ரீதியாக கர்நாடகத்திற்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதுதொடர்பாக பிரதமர் மோடி, ஜல்சக்தித்துறை மந்திரி ஆகியோரை நேரில் சந்தித்து பேசி ஒப்புதல் பெறுவேன். இந்த திட்டம் குடிநீர் திட்டத்திற்காக அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வரை முதல்-மந்திரிகளாக இருந்த எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோரின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் பசவராஜ் பொம்மை. அப்போதே மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.