தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை
பெங்களூருவில் போலீஸ் நிலையம் அருகே ரவுடியின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
பெங்களூரு:
ரவுடியிடம் போலீஸ் விசாரணை
பெங்களூரு பசவேசுவராநகரில் வசித்து வந்தவர் ஹரீஷ்(வயது 29). இவர், ரவுடி ஆவார். இவர் இதற்கு முன்பு பானசாவடி பகுதியில் வசித்து வந்தார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 4 வழக்குகள் உள்ளன. ஹரீசின் பெயர் பானசாவடி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் அவர் பசவேசுவராநகருக்கு மாறி சென்றிருந்தார். பசவேசுவராநகர் பகுதிகளிலும் குற்ற சம்பவங்களில் ஹரீஷ் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ஹரீசுக்கு, பானசாவடி போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். இதையடுத்து, நேற்று காலையில் அவர் பானசாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம், ரவுடி தொழிலை விட்டு விட வேண்டும், குற்றங்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்தனர். மேலும் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்று கூறி ஹரீசிடம் போலீசார் எழுதியும் வாங்கி கொண்டனர்.
கல்லைப்போட்டு கொலை
மேலும் ஹரீசின் தற்போதைய புகைப்படத்தை எடுத்து கொண்டு போலீஸ் நிலையத்தில் வந்து கொடுக்கும்படி, அவரிடம் போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, புகைப்படம் எடுத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு ஹரீஷ் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பானசாவடி போலீஸ் நிலையம் அருகே வரும்போது அவரை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்தனர்.
பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஹரீசை சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சுருண்டு விழுந்தார். இந்த நிலையில், ஹரீசின் தலையில் கல்லைப்போட்டு மா்மநபர்கள் கொலை செய்தார்கள். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து காரில் ஏறி மா்மநபர்கள் சென்று விட்டனர்.
பரபரப்பு
இதுபற்றி அறிந்த பானசாவடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ஹரீஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு ஹரீஷ் வந்திருப்பது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்த, அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகளே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக ஹரீஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். போலீஸ் நிலையம் அருகில் வைத்தே ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.