யானை தாக்கி விவசாயி சாவு

ராமநகரில் யானை தாக்கி விவசாயி பலியானார். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-28 20:57 GMT
பெங்களூரு:

யானை தாக்கி சாவு

  ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 37). விவசாயியான இவருக்கு சொந்தமாக கிராமத்தின் அருகே மாந்தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் தனது தோட்டத்தில் 2 தொழிலாளர்களுடன் நின்று சதீஸ் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை சதீசின் தோட்டத்திற்குள் புகுந்தது.

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஸ், சக தொழிலாளர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானையிடம் சதீஸ் மட்டும் சிக்கி கொண்டார். அவரை காப்பாற்ற சக தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில், அந்த யானை, சதீசை பலமாக தாக்கியது. இதில், பலத்தகாயம் அடைந்த சதீஸ் பரிதாபமாக இறந்து விட்டார்.

கிராம மக்கள் கோரிக்கை

  இதுபற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் சென்னப்பட்டணா புறநகர் போலீசார் தோட்டத்திற்கு விரைந்து வந்து சதீசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சென்னப்பட்டணா புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் மற்றும் சிறுத்தைகள் வந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், அதனை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

  மேலும் யானை தாக்கி பலியான சதீசின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டு்ம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்