காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தூக்குப்போட்டு பெண் போலீஸ் தற்கொலை

பெங்களூரு அருகே காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரான போலீஸ்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-07-28 20:53 GMT
பெங்களூரு:

பெண் போலீஸ் தற்கொலை

  பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்ககொல்லரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி நேத்ரா(வயது 26). கணவன், மனைவி இருவரும் போலீஸ்காரர்கள் ஆவார்கள். காமாட்சிபாளையா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேத்ரா பணியாற்றினார். பீனியா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார்.

  மஞ்சுநாத்தும், நேத்ராவும் காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தனர். திருமணமான புதிது என்பதால் கணவன், மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த நேத்ரா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கணவரான போலீஸ்காரர் மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார்.

கணவரிடம் விசாரணை

  இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் விரைந்து வந்து நேத்ராவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திருமணமான புதிது என்பதால் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாகவும், சமையல் செய்யும் விவகாரத்தில் மஞ்சுநாத்திற்கும், நேத்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நேத்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  நேத்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து மஞ்சுநாத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்