மல்லசமுத்திரம் அருகே வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
மல்லசமுத்திரம் அருகே வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
மல்லசமுத்திரம்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 28). இவர் நேற்று முன்தினம் கள்ளுக்கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து அக்கரைப்பட்டி பிரிவு செல்லும் பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற 3 பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து மூர்த்தியை தாக்கினர். இதையடுத்து மூர்த்தி வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த மூர்த்தி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அவர் மல்லசமுத்திரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குலசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (25), அதே ஊரை சேர்ந்த தனபால் (30) மற்றும் வெண்ணந்தூரை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (24) ஆகிய 3 கைது செய்தனர். இதையடுத்து கைதான 3 பேரும் ராசிபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.