தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘‘தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்’’, என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2021-07-28 20:31 GMT
சேலம்
எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் எந்த அறிவிப்பும் இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை. இந்தநிலையில் தி.மு.க.வின் 505 அறிவிப்புகளும் நிறைவேற்றப்படாததை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 6 ஆயிரம் இடங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.
போடியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சேலத்தில் எனது இல்லத்தின் முன்பு நானும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறேன். இதுபோல அந்தந்த மாவட்டங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை 
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நான் முதல்-அமைச்சர் ஆன உடனேயே போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்காக இருக்கும்’, என்றார். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவேயில்லை.
அதேபோல பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார். மாதந்தோறும் வீடுகளுக்கு மின்கட்டணம் கணக்கிட்டு, அதன்படி மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என்றார். கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்றார். 5 பவுனுக்கு குறைவாக வங்கிகளில் அடமானம் வைத்தவகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். ஆனால் சொன்னபடி அவர் எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவே இல்லை.
திட்டமிட்டு பொய் வழக்குகள் 
இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முடியாத நிலையில், மக்களை குழப்பி அவர்களை திசைதிருப்புவதற்காகவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டி வருகிறது. அதை தடுக்கமுடியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை அதாவது முடிவுற்ற பணிகளை திறந்துவைப்பதும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாகவுமே இருக்கிறார்கள். கொரோனா விஷயத்தில் சரியான நடவடிக்கைகளை கையாளாமல் மக்களை காப்பாற்ற தவறிவிட்டார்கள். இதையெல்லாம் கண்டித்தும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்