சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்க சேலம் மாவட்ட சார்பில் நேற்று சேலம் சீரங்காபாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க செயலாளர் பாலகுமார் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொடங்க வேண்டும். 5ஜி சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதம் கடைசி நாளன்று சம்பளம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான காலியாக உள்ள நிலங்களை விற்று அதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன்களை திரும்ப கட்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 3-வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஓய்வு கால பலன்கள் ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வர வேண்டிய ரூ.39 ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்னடர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.