3 பேரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது
ஒரே குடும்பத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்தவர் தர்ம லிங்கம் (வயது 65). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60) என்பவருக்கும் இடையே பொது பாதை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மகள் மீனா (28) வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்ம லிங்கம், மீனாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தர்ம லிங்கம் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் மீனாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற பாலகிருஷ்ணனுக்கும், அவருடைய மனைவி அல்போன்ஸ்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்மலிங்கத்தை கைது செய்தனர்.