அடிப்படை வசதிகள் இல்லாத வாலாஜா பஸ் நிலையம்

கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பஸ் நிலையமாக வாலாஜா பஸ் நிலையம் உள்ளது.

Update: 2021-07-28 18:46 GMT
வாலாஜா

பாதுகாப்பற்ற நிலை

வாலாஜா பஸ் நிலையம் 4 நுழைவாயில்களுடன் அமைந்துள்ளது. முதல் நுழைவு வாயில் வழியாக சோளிங்கரில் இருந்து வரும் பஸ்கள் உள்ளே வரும். ஆனால், பஸ்கள் வரும் ஆறுமுகசாமி சித்தர் மடம் தெரு முழுவதும் பஸ்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

அடுத்தது, காவேரிப்பாக்கத்தில் இருந்து வரும் பஸ்கள் வாலாஜா காந்திசிலை வாயில் முன்பு நுழைந்து, மற்றொரு வழியான நகராட்சி அலுவலகம் முன்புற வாயில் வழியாக செல்ல வேண்டும். ஆனால் இதனையும் நகராட்சி துறையினர் கண்டு கொள்வதில்லை. மேலும் பழுதடைந்த இரும்புகளை கடைக்காரர்கள் குப்பை போல் காந்திசிலை நுழைவாயில் எதிரே போட்டு வைத்துள்ளனர். இந்த இடம் பஸ் நிலையம் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இரவில் வழிப்பறியாளர்கள் பதுங்கும் இடமாகவும், மக்களை பயமுறுத்தும் இடமாகவும் உள்ளது.

நிழற்குடை 

உடனடியாக வாலாஜா நகராட்சி துறையினர் இந்தப் பழுதடைந்த இரும்பு குவியல்களை அகற்ற வேண்டும். வாலாஜா பஸ் நிலையம் பகுதியில் வேலூரில் இருந்து மற்றும் ஆற்காடு, ஆரணி பகுதியில் இருந்து சோளிங்கர், திருத்தணி செல்லும் நுழைவு வாயில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இங்கும் பஸ்கள் நிற்கும் பகுதியிலேயே ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பஸ்களில் ஏறி செல்ல நிழற்குடை அமைத்துத் தர வேண்டும்.

வாலாஜா பஸ் நிலையம் அருகில் நடைபாதையையொட்டி ஆக்கிரமிப்பு கடைகள் ஒரு வரையறை இல்லாமல் காந்திசிலை நுழைவாயில் முன்பு ரோட்டிலேயே வைத்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. பஸ் நிலையம் அருகில் ஆறுமுகசாமி சித்தர் பீடம் முன்பு வாலாஜா நகராட்சி கட்டிடங்கள் பாதி கட்டப்பட்டு உள்ளன. முழுமையாக கட்டப்படாமல் உள்ள இந்தக் கட்டிடத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது குடிக்கும் இடமாக மாறி உள்ளன.

கோரிக்கை

மேலும் பஸ் நிலைய வளாக பகுதியில் ஆண்களும், பெண்களும் அவசரத்துக்கு பயன்படுத்த நகராட்சி சார்பில் கழிப்பிடம் இருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கழிப்பிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விடடனர். தற்போது நிரந்தர கழிப்பிடம், நடமாடும் கழிவறை உடனடியாக மக்களின் நலன் கருதி அங்கு வைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவை அருகருகே உள்ளன. தினமும் இங்கு நகர பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றி உள்ள 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் உள்ளே நுழையும், வெளியே செல்லும் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்