நெல் மகசூலை பாதிக்கும் எலி தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி?
நெல் மகசூலை பாதிக்கும் எலி தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.;
பொள்ளாச்சி
நெல் மகசூலை பாதிக்கும் எலி தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
நெல் சாகுபடி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 3400 ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் நெல் நடவு செய்து உள்ளனர். இதற்கிடையே எலி தொல்லை காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எலி தொல்லை அதிகம்
ஒவ்வொரு வயலிலும் 100-க்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. வரப்புக்கு அடியில் உள்ள எலிகள் நடவு செய்த ஒரு மாதத்தில் நெல் பயிர்களை கடித்து பாலை உறிஞ்சுகின்றன.
இதனால் பயிர்களில் விளைச்சல் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மருந்து வைத்தாலும் அவற்றை எலிகள் சாப்பிடுவதில்லை. எலிகளால் சுமார் 20 சதவீதம் மகசூல் பாதிக்கும்.
இதுவரைக்கும் 10 ஏக்கரில் 70 எலிகள் வரை பிடிக்கப்பட்டு உள்ளன. எலி பிடிக்க ஒரு நாளைக்கு நபருக்கு ரூ.700 கூலி கொடுக்க வேண்டிய உள்ளது. இதனால் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
கட்டுப்படுத்தும் முறைகள்
எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளை கையாள வேண்டியது அவசியமாகும்.
நடவு பணிகளின் போது வயல் வரப்பில் காணப்படும் எலி வளைகளை தோண்டி அதில் ஒளிந்து கொண்டிருக்கும் எலிகளை அழிக்க வேண்டும். வரப்புகளை முடிந்த அளவிற்கு குறுகலாக அமைக்க வேண்டும்.
நெற்கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகளை கட்டுப்படுத்த வறுத்த கம்பு மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் ஜிங் பாஸ்பைடு கலந்துதேங்காய் சிரட்டையில் எலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலம் எலிகளை அழிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.