காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்றது

சர்க்கார்பதியில் மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்றது.

Update: 2021-07-28 17:34 GMT
பொள்ளாச்சி

சர்க்கார்பதியில் மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்றது.

பரம்பிக்குளம் அணை 

பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்து உள்ளது. அணை பராமரிப்பு, நீர்வரத்து கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 56.85 அடியாக உயர்ந்து உள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 3721 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தண்ணீர் திறப்பு 

இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 3-ந் தேதி தண்ணீர் திறக்க திட்டமிடப் பட்டு உள்ளது. 

மேலும் பரம்பிக்கும் அணையும் வேகமாக நிரம்பி வருவதால்,  சர்க்கார்பதியில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காண்டூர் கால்வாயில் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டி உள்ளது. 

மின்சாரம் உற்பத்தி 

இதன் காரணமாக பரம்பிக்குளத்தில் இருந்து சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சர்க்கார் பதியில் மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.  

மேலும் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்