வேலூர் கோட்டையில் இடிந்து விழும் பழமை வாய்ந்த கட்டிடங்கள்
வேலூர் கோட்டையில் இடிந்து விழும் பழமை வாய்ந்த கட்டிடங்களை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்
வேலூர் கோட்டை
வேலூரின் அடையாளங்களில் முக்கியமானதாக கருதப்படுவது வேலூர் கோட்டையாகும். பல ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டை மாநகரின் மையப்பகுதியில் அகழியுடன் அமைந்துள்ளது. இந்திய வரலாற்றை புத்தகமாக எழுத நினைத்தால் அதில் வேலூர் கோட்டை தொடர்பான நிகழ்வுகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
இந்த கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி, அருங்காட்சியகம், காவல்பயிற்சி பள்ளி, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை அலுவலகங்கள் உள்ளன. இவை தவிர திப்பு மகால், கண்டி மகால், கிளை சிறை போன்ற வரலாற்று கட்டிடங்களும் ஏராளமாக உள்ளது. கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் ஒருசில இடங்களை தான் பார்த்துச் செல்கின்றனர். சில காரணங்களால் பெரும்பாலான இடங்களை அவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.
இடிந்து விழுகிறது
அந்த வரலாற்று கட்டிடங்கள் அனைத்தும் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. அவைகள் நாளடைவில் பொலிவிழந்து இடிந்து வருகிறது. பல்வேறு கட்டிடங்கள் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. காவல்பயிற்சி பள்ளியாக செயல்பட்ட கட்டிடத்தின் கதவுகளை மர்மநபர்கள் உடைத்து உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. கல்மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபத்தின் மேற்பகுதி செடி, மரங்கள் வளர்ந்து வலுவிழந்துள்ளது. அவை மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. பல்வேறு கட்டிடங்களின் சில பகுதிகள் இடிந்து விட்டன. மிச்சம் உள்ள பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
புனரமைக்க வேண்டும்
இந்தநிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோட்டையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக கோட்டையில் கைவிடப்பட்ட புராதான கட்டிடங்களை மீண்டும் புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.