வாணியம்பாடியில் பைனான்சியரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

வாணியம்பாடியில் சினிமா பாணியில் பைனான்சியரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1¾ லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-28 17:32 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். பைனான்சியரான இவர் கடந்த 23-ந் தேதி இரவு வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே மொரசபள்ளி பகுதியில் சூதாட்டம் விளையாடியதில் கிடைத்த ரூ.25 லட்சத்துடன் நாட்டறம்பள்ளிக்கு தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். 

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு மேம்பாலத்தின் மீது சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த கும்பல் ஞானசேகரனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி ஞானசேகரன் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே மொரசபள்ளி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சூதாட்டம் நடந்த இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த அலெக்ஸ் (வயது 33), லட்சுமணன் (38), கிருஷ்ணமூர்த்தி (36), காலனி பூங்காநகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் சுந்தரநாதன் (46) ஆகிய 4 பேரும் பேரணாம்பட்டு பகுதிக்கு வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பைனான்சியர் ஞானசேகரனிடம் இவர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 3 பேரை தேடி வருகிறோம். சம்பவத்தன்று ஞானசேகரன்  குடிபோதையில் இருந்ததால் கொள்ளையடிக்கப்பட்ட தொகையை மாற்றி மாற்றி தெரிவித்தார். கொள்ளை போன பணம் ரூ.4½ லட்சம் மட்டும்தான். கைதுசெய்யப்பட்ட 4 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுமதிகளை வழங்கி பாராட்டினார். அப்போது வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி  உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்